கடலூர்: கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணி குப்பம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் பேரன் ஆகிய 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீஸ் விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், கொலை செய்யப்பட்டவர்களுள் ஒருவரான சுதன் குமார், ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 15 நாட்கள் அலுவலகத்திலும், 15 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 15ஆம் தேதி நெல்லிக்குப்பத்தில் உள்ள வீட்டில் சுதன் குமார், தாய் கமலேஸ்வரி மற்றும் மகன் நிஷாந்த் மூவரும் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இதனிடையே, சுதன் குமார் விவாகரத்துக்குப் பிறகு அஞ்சுதம் சுல்தானா என்ற பெண்ணுடன் 'லிவிங் டு கெதர்' உறவு முறையில் இருந்து வந்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட சிறுவன், அஞ்சுதம் சுல்தானாவிற்கும் சுதன் குமாருக்கும் பிறந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த அஞ்சுதம் சுல்தானாவிடம் டிஎஸ்பி பழனி தலைமையில் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. அதன் பின்னர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.