சென்னை: சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் ஐடி ஊழியர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்து அதை தொடர்பு கொண்டுள்ளார். அதன் அடிப்படையில், அவர் வாட்ஸ்அப் குழு ஒன்றிலும் இணைந்துள்ளார்.
இதையடுத்து, அந்த குழுவில் சில நபர்கள் அனுப்பிய லிங்க் மூலமாக முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில், முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று கூறிய வார்த்தைகளை நம்பி, அவர்கள் சொன்னபடி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தேதிகளில் 1 கோடியே 70 லட்சத்து 53 ஆயிரத்து 938 ரூபாய் செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர், அவர் செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் அந்த செயலியில் காண்பித்துள்ளனர். அதன்பின் முதலீடு செய்த பணத்தை ஐடி ஊழியர் எடுக்க முயன்றபோது, அவர்கள் வெவ்வேறு காரணங்களைக் கூறி மேலும் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டியைச் சேர்ந்த சுகுணசீலன் (25), இளைய குமார் (27) ஆகிய இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் இவரிடம் இருந்து 5 செல்போன்கள், 4 ஆதார் கார்டுகள், 9 ஏடிஎம் கார்டுகள், சிம் கார்டுகள் மற்றும் வங்கி காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியை செய்வதற்காக பல்வேறு நபர்கள் மற்றும் போலியான நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் கணக்குகள் ஆரம்பித்து பல்வேறு நபர்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆபாச படங்களை அனுப்பிய ஆன்லைன் கடன் செயலி நிறுவனம்.. கணவரின் விபரீத முடிவு!