சென்னை:ஜனவரி 20ஆம் தேதி பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்க்கு, காவல்துறை சார்பில் எந்தவித காட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை எனவும், காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சி தலைவர் தான் முடிவெடுப்பார் எனவும் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.
சென்னையின் 2-வது பசுமை வெளி விமான நிலையமாகக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி, பரந்தூர் புதிய பசுமை வெளி விமான நிலையத்தை அமைக்கும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.
அதனால், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கடந்த 900 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இந்த நிலையில் தீர்மானம் கொண்டு வந்ததைத் தவிர வேறு எந்தப் போராட்டத்தையும் தவெக மேற்கொள்ளவில்லை எனவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்களை சந்திக்க வரவில்லை எனவும் ஏகனாபுரம் கிராம மக்கள் ஆதங்கம் தெரிவித்திருந்தனர்.
தற்போது, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக் குழுவினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்துப் பேச அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்புக் கோரி தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் கொடுத்திருந்தனர்.
இதையும் படிங்க:இந்தியா கூட்டணியுடன் வருவது தான் விஜய்க்கு நல்லது - செல்வப்பெருந்தகை!
அதற்காக, தவெக தலைவர் விஜய் ஜனவரி 20-ல் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்களை சந்திப்பதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகத்தினை நேரில் சந்தித்து அவரிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன்,"ஜனவரி 20-ல் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை சார்பில் எந்தவித காட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை எனவும், காஞ்சிபுரம் மாவட்ட தவெக நிர்வாகிகள் மட்டுமே அந்நேரத்தில் இருப்பர் எனவும், விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிய எவ்வளவு நேரம் ஆகுமோ, அந்த நேரம் வரை விஜய் சந்திப்பார்" எனத் தெரிவித்தார்.
மேலும் இந்தியா கூட்டணிக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்திருந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதற்கு இன்னும் கால நேரம் இருக்கிறது. அதுகுறித்து தலைவர் விஜய் முடிவெடுப்பார்" எனப் பதிலளித்தார்.