புதுக்கோட்டை:மத்திய அரசு கொண்டு வந்துள்ள குற்றவியல் நடைமுறை சட்டம் குறித்து, புதுக்கோட்டை பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், "தற்பொழுது உள்ள இந்திய குற்றவியல் சட்டம் 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்திய சாட்சிகள் சட்டம் 1872ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்திய குற்றவியல் செயல்முறை சட்டம் 1973-ல் இயற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆனப் பிறகும் எந்தவித சீர்திருத்தமும் செய்யவில்லை என்றால், இதைவிட கேவலம் எதுவும் இல்லை.
குற்றவியல் சீர்திருத்த சட்டங்கள்:திருத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். குற்றவியல் சீர்திருத்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டது. நடைமுறைக்கு வந்ததைத் தடுப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை.
இதில் பின் வாங்குவதற்கோ திரும்ப பெறுவதற்கோ இடமில்லை. குற்றவியல் சீர்திருத்த சட்டங்கள் மூலம் சாட்சிகள் நீதிமன்றத்திற்கு வராமல் சாட்சியம் அளிக்க முடியும். அதேபோல், வழக்கறிஞர்கள் ஆன்லைன் மூலமே வாதாட முடியும். அதேபோல் ஒவ்வொரு வழக்கும் விரைவாக முடிவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றார்.
'நீட்' பாஜக கொண்டு வரவில்லை:மேலும், வழக்கறிஞர்கள் போராட்டம் நியாயமற்றது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இந்த போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்" என்றார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நீட் தேர்விற்கு எதிராக பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "முதலில் நீட் தேர்வை பாரதிய ஜனதா கட்சி அரசு கொண்டுவரவில்லை.
நீட் வருவதற்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு ஒரு நுழைவுத் தேர்வு, அகில இந்திய அளவில் ஒரு நுழைவுத் தேர்வு, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு என 13 நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், இப்போது அவ்வாறு இல்லை; ஒரு 'நீட் தேர்வு' (NEET Exam) எழுதினால், இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பிக்கலாம். இது எவ்வளவு ஒரு நல்ல விஷயம். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. அதை சரிசெய்ய வேண்டிய கடமை உள்ளது" என்றார்.
நாட்டிலேயே அதிக மருத்துவ வியாபாரம் தமிழகத்தில்தான்:தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவிலேயே மருத்துவ வியாபாரம் தமிழகத்தில்தான், அதிக அளவு உள்ளது. 52 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இதில், 90 விழுக்காடு திமுகவினருக்கு சொந்தமானது. இந்தியாவிலேயே இன்று தமிழ்நாட்டில் தான் நீட் தேர்வில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுக்கு மாணவர்களிடையே எழுந்த விழிப்புணர்வே காரணம்.
விஜய்க்கு சரியான சட்ட விழிப்புணர்வு இல்லை:ஆனால், இப்பொழுதும் கூட எதிர்க்கட்சிகள் நீட்டை ரத்து செய்வோம் எனக் கூறி வருகின்றனர். அது முடியவே முடியாது. தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு சரியான சட்ட விழிப்புணர்வு இல்லை. அவர் அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு சொல்லி வருகிறார்.
நல்ல தலைவர் என்று தன்னை நம்பாத விஜய் மற்றவருக்கு உபதேசம் செய்வதில் அர்த்தமில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை பார்த்தால் நல்ல தலைவராக தெரியவில்லையா? விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அவநம்பிக்கையை விதைக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நோய்தொற்றுகளால் கர்ப்பத்தில் ஏற்படும் சிக்கல்கள்.. ஆஸ்பிரின் மாத்திரை தீர்வா!; ஆய்வு கூறுவது என்ன?