திருச்சி: கடந்த நவம்பர் 22ஆம் தேதி பிரபல ரவுடியும் ஏ+ குற்றவாளியாகவும் இருந்த கொம்பன் ஜெகன் என்பவரை போலீஸ் என்கவுண்டர் செய்தனர். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், "கொம்பன் ஜெகன் டீம் (Komban_jegan_team)" என்ற முகவரியில் இருந்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகைப்படத்தை பகிர்ந்து, "விரைவில் தலைகள் சிதறும்" "Komban Brothers" என பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, திருச்சி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவேற்றம் செய்தது 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதன் அடிப்படையில், அச்சிறுவனை கைது செய்து, சட்டபிரிவு 153(В), 505(2) IPC r/w 66(D) IT Act-21 கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்த போது, மேலும் 17 வயது சிறுவன் உட்பட மூன்று சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.