நீலகிரி:ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய இதமான காலநிலையை அனுபவிக்க, நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிவது வழக்கம்.
அந்த சமயத்தில், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் கண்காட்சி, பழ கண்காட்சி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். இதனிடையே, நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால் மலைப்பாதைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
அதனை முன்னிட்டு, நீலகிரி மலைப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, மாவட்ட காவல்துறை மூலம் மலை ஏற ஒரு பாதையும், இறங்க ஒரு பாதை என போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதும் வழக்கம். அந்த வகையில், கடந்த மே 1ஆம் தேதி முதல் நீலகிரிக்கும் வந்து செல்லும் பாதைகள் ஒருவழிப் பாதையாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
அந்தவகையில், நீலகிரி வருவதற்கு குன்னூர் வழியும், திரும்பிச் செல்ல கோத்தகிரி வழியாகச் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறைகள் நிறைவடைந்ததை அடுத்து நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்தது. அதன் பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைப்பாதை இருவழி போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டலால் 5 மணி நேரம் தாமதமான இண்டிகோ விமானம்!