சென்னை:பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று துவங்கும் திருவிழா செப்டம்பர் 8ஆம் தேதி நிறைவடைகிறது.
இன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றம் மற்றும் நற்கருணை தேர் ஊர்வவம் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு, 6வது அவென்யூ, பீச் ரோடு ரோடு, 2வது அவென்யூ வழியாக வந்து 7வது அவென்யூ வழியாக மீண்டும் தேவாலயத்திற்கு திரும்பும். இதில் ஒரு லட்சம் யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நற்கருணை ஊர்வலம் செப்டம்பர் 1ஆம் தேதி மாலை 5.30 மணிக்கும், 7ஆம் தேதி மாலை 5.30 மணிக்கும் நடைபெறுகிறது. இதன் காரணமாக பெசன்ட் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் மாற்று வழிகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்:சென்னை திரு.வி.க பாலத்தில் இருந்து பெசன்ட் நகர் அவென்யூ சாலை வழியாக பெசன்ட் நகர் அல்லது சாஸ்திரி நகர் செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் செல்லும். அதிக கூட்டம், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மட்டுமே அந்த வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது. அதற்குப் பதிலாக டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் எல்.பி சாலையை நோக்கி எம்.ஜி சாலை, பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு, சாஸ்திரி நகர் பஸ் டிப்போ, வலதுபுறம், 2வது அவென்யூ வழியாகச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.