தருமபுரி:தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றான ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, ஒரு அருவியாக இல்லாமல் பல அருவிகளின் தொகுப்பாகத் திகழ்கிறது.
இந்த நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், தற்போது கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக, ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று காலை முதலே ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் பயணிகளால் நிரம்பி வழிகிறது.