ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த பீகார் இளைஞர் கைது:கடந்த வாரம்சென்னை திருமங்கலத்தில் உள்ள ஹோட்டலில் உணவருந்தி கொண்டிருந்த 20 ரவுடிகள் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்த ரவுடிகளிடமிருந்து நான்கு நாட்டுத் துப்பாக்கிகள், 82 தோட்டாக்கள், ஏர்கன்,11 பட்டாக்கத்திகள் மற்றும் கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் உடன் இந்த ரவுடிகள் அனைவரும் சென்னையில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 20 ரவுடிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களுக்குத் துப்பாக்கி சப்ளை செய்தது யார் என போலீசார் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்மாயில் அன்சாரி (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பீகார் மாநிலம் சென்று இஸ்மாயிலை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பீகாரில் கட்டிட வேலை செய்து வருவதும் கடந்த 10 ஆண்டுகளாகச் சென்னைக்கு வந்து ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் இஸ்மாயிலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தற்கொலை செய்வது போல வந்த கனவால் பள்ளி மாணவி தற்கொலை:சென்னை மயிலாப்பூர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் தனது வீட்டில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வகுப்பு நடத்தி வருகிறார். மேலும் நாகலட்சுமி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார்.
நாகலட்சுமியின் மகள் ஜனனி (17) மைலாப்பூரில் உள்ள தனியார் பெண்கள் மேல் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜனனி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திரும்பிய நாகலட்சுமி தனது மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு கதறி அழுதுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மயிலாப்பூர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் அறையை போலீசார் சோதனை செய்தபோது கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
அதில், “இரவில் தூங்கும் போது அடிக்கடி தற்கொலை செய்வது போன்று கனவு வருவதாகவும், இதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, 3 படத்தைப் போல நான் தற்கொலை செய்து கொள்கிறேன். அம்மா, அண்ணன் மற்றும் நண்பர்களைப் பிரிவது மிகவும் வருத்தமாக உள்ளது” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவியின் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரத்தில் மூதாட்டியிடம் மூன்றரை லட்சம் மோசடி:சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் மீனம்பாள் சந்து பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரி (68). இவர் மதுரை செங்கப்படை எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கியிலிருந்து ராஜேஸ்வரிக்கு சில நாட்களுக்கு முன் ஏ.டி.எம். கார்டு வந்துள்ளது. அந்த கார்டை ஆக்டிவேட் செய்யாமல் வைத்திருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜேஸ்வரியின் செல் போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தான் வங்கி மேலாளர் பேசுவதாகவும் ஏ.டி.எம். கார்டை ஆக்டிவேட் செய்ய ஓ.டி.பி. எண் வந்துள்ளது அதைக் கூறுமாறும் கூறியுள்ளார். ராஜேஸ்வரியும் இதை நம்பி, ஓ.டி.பி. எண்ணைக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 75 ஆயிரம் ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ராஜேஸ்வரியின் மற்றொரு வங்கிக் கணக்கு உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தாம்பரம் கிளை மேலாளர் பேசுவதாகக் கூறிய மர்ம நபர் மீண்டும் ஓ.டி.பி. எண்ணைக் கேட்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியிலிருந்து 2.29 லட்சம் ரூபாய் பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளார்.
அதன் பின்னரே மர்ம நபர்கள் ஓ.டி.பி. எண்ணைக் கேட்டு தனது வங்கிக் கணக்குகளிலிருந்து 3.4 லட்சம் ரூபாய் பணத்தைத் திருடியது தெரியவந்தது. இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து நூதன முறையில் பணத்தைத் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நாடாளுமன்ற தேர்தல் 2024: திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்!