சென்னை: தமிழகத்தில் ஜனவரி மாதம் தொடக்கத்திலிருந்தே வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதைத் தொடர்ந்து, வடதமிழகத்தில் வறண்ட வானிலையும், தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில், லேசான முதல் மிதமான மழையும் பெய்தது. இந்நிலையில் ஜனவரி 28 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (ஜன.23) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ராமர் கோயில் கும்பாபிஷேகம்; சட்டக்கல்லூரி மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தற்போது தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையானது நிலவிய நிலையில் எங்கும் மழைப் பதிவாகவில்லை. ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை, தமிழகம் புதுவையில் பதிவான மழை அளவு 50.4 மி.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 10.7 மி.மீ ஆகும்.
மதுரை மாவட்டத்தில், வெப்ப நிலை மிக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தர்மபுரி, ஈரோடு,கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் தஞ்சை, கடலூர், நாகை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயில்களில் காவல் துறையை வைத்து மிரட்டுகின்றனர்.. நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!