சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை சிங்கம்புணரியில் 9 சென்டிமீட்டரும், குறைந்தபட்சமாக விருதுநகரில் தலா 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பரமத்தியில் 36° செல்சியஸும், குறைந்தபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 18.6° செல்சியஸும் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: வடதமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
ஆகஸ்ட் 20: தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 21: தமிழ்நாட்டில் உள்ள ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 22 முதல் 26 வரை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 - 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:ஆகஸ்ட் 20 முதல் 24 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.