சென்னை :தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளிலும் மதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளை இனி நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
'பரம்பொருள்' என்கின்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்கின்ற நபர் அண்மையில் சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடத்திய மாணவர்களுக்கான போதனை நிகழ்ச்சியில், மூடநம்பிக்கை சார்ந்த கருத்துக்களை பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி மற்றும் சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் பணியிடமாறுதல் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.