சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 1 பதவிகளில் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 95 காலிப் பணியிடங்களுக்கான தேர்வை, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நடத்தியது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த முதல் நிலைத் தேர்வினை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்.
இதன் முடிவுகள் 2023 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், அவர்களது அசல் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 2023 மே 8ஆம் தேதி முதல் மே 16ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வு 2023 ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்தத் தேர்வில், ஒரு பணியிடத்திற்கு சுமார் 20 பேர் வீதம் தேர்வு எழுதுவதற்கு அழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விரித்துரைக்கும் வகையிலான முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தேர்வானவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு மார்ச் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் நேர்காணல் நடைபெறுகிறது. தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது அனுப்பிய சான்றிதழ்களின் உண்மைச் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு வர வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும்போது அளிக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் இமெயில் முகவரிக்கு அழைப்பு அனுப்பப்படும். அதில் அவர்களுக்கான நேரத்தில் கலந்தக் கொள்ள வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு? பிசிசிஐ தகவல்!