தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"PhD படிக்க முதுகலை படிப்பு தேவையில்லை" - ரூ.4 கோடி ஸ்காலர்ஷிப்புடன் அமெரிக்கா செல்லும் தமிழக மாணவி நித்யஸ்ரீ! - PhD without PG - PHD WITHOUT PG

TN Student Nithyashree: முதுகலை படிக்காமலேயே, அமெரிக்காவில் ரூ.4 கோடி உதவித் தொகையில் நேரடியாக ஆராய்ச்சி படிப்பை படிக்கச் செல்லும் தமிழக மாணவி நித்யஸ்ரீ குறித்த சிறப்பு செய்தி தொகுப்பைக் காணலாம்.

அமெரிக்காவில் PHd படிக்க செல்லும் தமிழக மாணவி நித்யஸ்ரீ புகைப்படம்
அமெரிக்காவில் PHd படிக்க செல்லும் தமிழக மாணவி நித்யஸ்ரீ புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 3:06 PM IST

சென்னை: டெக்னோக்ராட்ஸ் இந்தியா காலேஜ் பைண்டர் (TICF) கல்வி ஆலோசனை மையத்தின் மூலம் நித்யஸ்ரீ மகேஷ்வரன் என்ற மாணவி, திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பி.டெக் (பயோடெக்) இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள லொசேன் பல்கலைக்கழகத்தில் (University of Lausanne) உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப்பை முடித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான இந்தியானா யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினில், தனது ஆராய்ச்சி படிப்பினை ரூ.4 கோடி உதவித் தொகையுடன் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மாணவி நித்யஸ்ரீ மற்றும் குடும்பத்தினர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இது தொடர்பாக மாணவி நித்யஸ்ரீ கூறும்போது, “திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் பிடெக் பயோ டெக்னாலஜி இறுதி ஆண்டு படித்து வருகிறேன். அமெரிக்காவில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் நேரடியாக ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் இந்தியானா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் மெடிசன் கல்லூரியில் கேன்சர் பயாலஜி பிரிவில் ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளேன்.

நேரடி ஆராய்ச்சி படிப்பிற்கு முழுக்கல்வி உதவித் தொகையும், ஆண்டிற்கு 35 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3 கோடி) கல்வி உதவித் தொகையும் அளிக்கின்றனர். ஆராய்ச்சி படிப்பினை முடித்த பின்னர் பொது சுகாதாரத்துறையில் பணிபுரிய வேண்டும். அதற்காக உலக சுகாதார அமைப்பில் இணைந்து புற்றுநோய் குறித்து பணியாற்ற உள்ளேன்.

எனக்கு பள்ளியிலிருந்தே பயாலஜி பாடத்தின் மீது அதிக விருப்பம். மேலும், நெருங்கிய உறவினர் புற்றுநோயால் இறந்து விட்டார். எனவே, புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி பாடத்தினை எடுத்தேன். முதலாம் ஆண்டு கரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே படித்தேன்.

அப்பொழுது கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், கல்லூரியைத் தாண்டி உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உலகளவில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறுவார். அப்போதுதான், முதலாம் ஆண்டு படிக்கும்போது முதுகலை பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக ஆராய்ச்சி படிக்கலாம் என்பது தெரியவந்தது. ஆராய்ச்சி பட்டப் படிப்பினை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்ததால், முதுகலை பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளேன்.

ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள முதுகலை பட்டப்படிப்பு தேவையில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டால், அவர்கள் கல்வி உதவித் தொகையும் தருவார்கள். இதன் மூலம் நமது செலவைப் பார்த்துக் கொள்வதுடன் குடும்பத்திற்கும் பயனுள்ளதாக அமையும். ஆராய்ச்சிப் படிப்பினை முடித்துவிட்டு, பொது சுகாதாரத்திற்கு தனது பங்களிப்பை அளிக்க வேண்டும். அதற்காக உலக சுகாதார நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து நித்யஸ்ரீயின் தந்தை மகேஷ்வரன் கூறும் பொழுது, "தனது மகள் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பினை மேற்கொள்ள செல்வது மிகவும் பெருமையாக உள்ளது. முதுகலை பட்டம் படிக்காமல் நேரடியாக ஆராய்ச்சி பட்டம் பெற முடியும் என எனக்கே தெரியாததைக் கண்டறிந்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு சாதித்துள்ளார். அவர் கல்லூரி படிப்பு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி படித்து அமெரிக்காவில் நேரடியாக ஆராய்ச்சி பட்டம் படிக்கச் செல்கிறார்.

அமெரிக்காவில் உள்ள 5 பல்கலைக்கழகங்களிலிருந்து வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்து படிக்கச் செல்கிறார். மாணவர்களுக்கு விடாமுயற்சியும், ஆர்வமும் இருந்தால் ஆராய்ச்சி படிப்பை நேரடியாக படிக்க முடியும். கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் வழிகாட்டுதலின் அடிப்படையில் தற்போது ஆராய்ச்சி படிப்பு வரை சென்றுள்ளார்" எனத் தெரிவித்தார்.

மாணவியின் ஆராய்ச்சி பட்டப் படிப்பிற்கு வழிகாட்டிய கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் கூறும் பொழுது, "இந்த தலைமுறை மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, உலக அளவில் இந்தியாவில் உள்ளது போல் இளைஞர்கள் இல்லை. மாணவர்களிடம் வாழ்க்கையில் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வெறி இருந்தால், அவர்கள் எண்ணற்ற வாய்ப்புகளை பெற முடியும் என்பதற்கு நித்யா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நித்யா 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் பொழுதிலிருந்து எங்களின் ஆலோசனை பெற்று படித்து வருகிறார்.

நாங்கள் நிறைய மாணவர்களை ஐஐடி, பிட்ஸ் பிளானி பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது எங்களுக்கு சாதனையாக தெரியவில்லை. தனக்கு கல்வி வேண்டும் என்பதற்காக அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடங்கினார். அரசுக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பொழுது வெளிநாடுகளில் சென்று எக்ஸ்சேஞ்ச் மூலம் படிக்க முடியும். வெளிநாடுகளில் சென்று படிக்கும் பொழுது அங்குள்ள வாய்ப்புகள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும்.

பொறியியல் பட்டப்படிப்பு மேற்கொள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் கல்விக் கட்டணமாக செலவிட்டோம். ஆனால், ஆராய்ச்சிப் படிப்பினை மேற்கொள்ள ரூ.4 கோடி முழு கல்வி உதவித் தொகையுடன் கிடைத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து 5 பல்கலைக்கழகங்கள் அழைத்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். எல்லோரிடமும் தீவிர தேடுதல் இருந்தால் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், தேடுதல் குறைவாக உள்ளது. தேடுதலை ஆழப்படுத்துங்கள், விரிவுபடுத்துங்கள் வைரங்கள் கிடைக்கும். தேடுவது இல்லாமல் இருந்தால் மண் தான் கிடைக்கும்.

தங்களின் குடும்பத்தை 10 மடங்கு உயர்த்த வேண்டும் என்று எண்ணமும், அதற்குரிய கருவியான கல்வியை படித்தால் மட்டும் போதும், மற்றதெல்லாம் உங்களை தானாக தேடி வரும். கடின உழைப்பும், உயர்ந்த குறிக்கோளும் இருந்தால் வாழ்க்கையில் எல்லோரும் வெற்றி அடையலாம் என்பதற்கு நித்யா ஒரு உதாரணம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.. சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடு என்ன?

ABOUT THE AUTHOR

...view details