சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, மே 10ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையில் 4,107 மையங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள 12 ஆயிரத்து 616 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும் எழுத உள்ளனர். சிறைவாசிகள் 235 பேரும் தேர்வினை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.