சென்னை:2023-2024ஆம் ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளில் மட்டும் 91.02 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காட்டை எட்டி சாதனை படைத்துள்ளனர். மேலும், தமிழ் பாடத்தில் 35 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
அதேபோல், 2023-2024ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 87.90 ஆகும். 1,364 அரசுப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன.
தமிழ் பாடத்தில் மட்டும் 100 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். இவ்வாறு மொத்தம் 12 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 1,761 பள்ளிகள் இவ்வாண்டு 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இது பள்ளிக்கல்வித் துறையின் வரலாற்றில் ஒர் மைல்கல்லாக கருதப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.