சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன், மாநிலப் பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் ஆகியோரின் தரப்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், "இன்று (மார்ச்.04) மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைநகரில் ஒட்டுமொத்த வருவாய்த்துறை அலுவலர்களும் இரவு, பகலாகத் தொடர்ந்து காத்திருப்பது என அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வரும் வியாழக்கிழமை (மார்ச்.07) முதலாக சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இரவு, பகலாகத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், இதிலும் தீர்வு எட்டப்படாத பட்சத்தில், தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த வருவாய்த்துறை அலுவலர்களும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முற்றாகப் புறக்கணிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், 10 அம்சக் கோரிக்கையில் ஒரு கோரிக்கை மட்டும் ஏற்கப்பட்டு, மற்றக் கோரிக்கைகள் குறித்து ஆணைகளோ, எந்தவித வாக்குறுதியும் அளிக்காததால், காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடர்வது என முடிவு செய்துள்ளோம்.
முன்னதாக வருவாய்த்துறை அலுவலர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் அரசிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை. அதனைத் தொடர்ந்து 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகம் முடங்கி உள்ளது. பொது மக்களுக்கான சேவைகளும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களின் பெயர்களை முறையே இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் என பெயர் மாற்றம் செய்யத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2016ல் அறிவிப்பு வெளியிட்டு, 8 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. திமுக ஆட்சி அமைந்த பின்னர் அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டும், 10 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வருவாய்த்துறையில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்பிட முதலமைச்சர் உத்தரவிட்டும், திட்டமிட்டே காலதாமதம் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணையின் படி பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் போதிய வாகனங்கள் இன்றி எவ்வாறு தேர்தல் பணியைச் சிறப்பாகப் பார்க்க முடியும்" என கேள்வி எழுப்புகின்றனர்.
இதையும் படிங்க:'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு 15வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. அரசு அழைத்து பேச கோரிக்கை!