தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக ஆளுநரை சந்தித்த தவெக தலைவர் விஜய்.. அரசியல் தலைவர்களின் ரியாக்‌ஷன் என்ன? - TVK VIJAY MEET GOVERNOR RN RAVI

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ள நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தவெக தலைவர் விஜய் மனு , ஆர்.எஸ் பாரதி
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தவெக தலைவர் விஜய் மனு , ஆர்.எஸ் பாரதி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2024, 5:39 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தொடர்ந்து. இதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

இந்நிலையில், பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தவெக தலைவர் விஜய் (TVK Vijay) இன்று (டிசம்பர்30) திங்கட்கிழமை தனது கைப்பட கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில், “அண்ணனாகவும், அரணாகவும் எல்லா சூழ்நிலைகளிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தவெக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார்.

அதில், “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெஞ்சல் புயல் விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத்தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: "பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் நிற்பேன்" - தவெக விஜய் கைப்பட கடிதம்!

விஜய்யின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாகியுள்ளது. இந்நிலையில், ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்தது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, விஜய் செய்வது எலைட் (Elite) அரசியல் என விமரிசித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது, எகஸ் தளத்தில், “ஆளுனரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் தில்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம். இப்போது தவெக தலைவர் நடிகர் விஜய் அவர்களை வைத்து அரசியல் செய்கிறது. ஆளுனர் ரவி அவர்களைவிஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார். ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் Elite அரசியல” என குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக ஈடிவி பாரத் தமிழ், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் பேசியுள்ளது. அப்போது அவர் கூறுகையில், ஆளுநரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்துள்ளது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக எந்த விமர்சனமும் கூற விரும்பவில்லை. மேலும், பெஞ்சல் புயல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது தொடர்பாகவும் நான் எந்த விமர்சனமும் செய்ய விரும்பவில்லை. ஆளுநரை விஜயை சந்திக்கிறார் என்றார் சந்தித்து விட்டு போகட்டும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:"தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்"-ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தவெக தலைவர் விஜய் மனு!

தொடர்ந்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப தலைவர் கோவை சத்யன் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், தவெக தலைவர் விஜய், மாநிலத்திற்கு ஆளுநர் தேவையில்லை என மாநாட்டில் கூறிய பிறகு அவரை நேரில் சந்திக்கிறாரே என்ற கேள்விக்கு, “நோக்கம் வேறாக இருந்தாலும், ஆளுநரை சந்திப்பது தான் நடைமுறை. அவரை தான் பார்க்க வேண்டும். விஜய் அரசியல் இயக்கம் ஆரம்பித்துள்ளார், ஆரம்பகட்ட நடவடிக்கையை துவங்கியுள்ளார். அதிமுக செய்துவரும் காரியங்களை விஜய் ஆரம்பித்துள்ளார். அதற்காக வாழ்த்துகள்” என்றார்.

முன்னதாக், ஆளுநரை சந்தித்த தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் ஆளுநரை சந்தித்துவிட்டு நேரடியாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

ABOUT THE AUTHOR

...view details