சென்னை:தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கவனித்து வந்த காதி மற்றும் கிராம தொழிலக வாரியத் துறைக்கான பொறுப்பு, வனத் துறை அமைச்சர் க.பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், காதி மற்றும் கிராம தொழிலக வாரியத் துறையை இதுவரை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வந்த காதி மற்றும் கிராம தொழிலக வாரியத் துறையை இனி வனத் துறை அமைச்சர் க.பொன்முடி கூடுதலாக கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் பரிந்துரைபடி, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரு மூத்த அமைச்சர்களின் துறை பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளதன் அடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை ஆறாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.