சென்னை:நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தை நாடப்போவதில்லை எனவும் மத்திய அரசிடம் தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்துவோம் என்றும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் நீட் தேர்வு முறை உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தப்போது 2016 ஆம் ஆண்டு இறுதியிலேயே நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது கூட நீட் தேர்வு வரவில்லை. நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து ஆய்வு குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வில் குழப்பங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
2021 ஆம் ஆண்டு இரண்டு மாணவர்களும், கடந்த ஆண்டு ஒரு மாணவரும் தான் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 67 பேர் முழு முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். சில மாணவர்கள் சாத்தியமில்லாத வகையில் 718, 719 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கு தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. ஆனால் மதிப்பெண்கள் வழங்கியதில் குளறுபடிகள் உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் 2018 இல் வந்த தீர்ப்பின்படி கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. ஆனால் எந்த விதத்திலும் நீட் தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படலாம் என்று நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.