தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 10:58 PM IST

ETV Bharat / state

பயிர் காப்பீடு முதல் காளான் வளர்ப்பு வரை.. வேளாண்மை– உழவர் நலத்துறையில் அசத்தும் 30 புதிய அறிவிப்புகள்! - TN assembly 2024

TN Assembly 2024: தமிழ்நாடு சட்டபேரவையில் வேளாண்மை – உழவர் நலத்துறையில் 30 புதிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் புகைப்படம்
அமைச்சர் எம்.ஆர்.கேபன்னீர்செல்வம் (Credits - MRK PANNEERSELVAM X PAGE)

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஜூன்.22) வேளாண்மை – உழவர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

வேளாண்மை – உழவர் நலத்துறை புதிய அறிவிப்புகள்:

  • தமிழ்நாட்டில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிப்பதற்கான சிறப்புத் திட்டம் 18 மாவட்டங்களில் ரூ.30 கோடி செலவில் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
  • உயர் தொழில்நுட்ப சாகுபடியை வேளாண் பெருமக்களிடம் ஊக்குவித்து உற்பத்தியை பெருக்கிட ரூ.10 கோடியே 19 லட்சம் மானியத்தில் பசுமைக் குடில், நிழல்வலைக் குடில்கள் அமைக்கப்படும்.
  • மழையிலிருந்து வேளாண் விளை பொருட்களைப் பாதுகாத்திட ஐந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.10 கோடி செலவில் பாதுகாப்புக் கூடங்கள் அமைக்கப்படும்.
  • நாமக்கல் மாவட்டம் விவசாயிகளின் நலனுக்காக மோகனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஏற்படுத்திடவும், கட்டிடம் கட்டவும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தமிழ்நாட்டில் துவரை உள்ளிட்ட பிற பயறு வகைகளின் பரப்பு விரிவாக்கத்திற்கும், அவைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மிகச்சன்ன ரக நெற்பயிர் சாகுபடியை விவசாயிகளிடையே ஊக்குவிக்கும் வகையில் 2,000 மெட்ரிக் டன் மிகச்சன்ன வகை உயர் விளைச்சல் நெல் ரகங்களின் சான்றுவிதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கிட ரூ.8 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கோடை காலத்தில் காய்கறிகள் விலையினைக் கட்டுக்குள் வைக்கும் விதமாக சென்னை மாநகருக்கு காய்கறி அளிக்கக்கூடிய மாவட்டங்களில் நிழல்வலைக் குடில் அமைத்து காய்கறிகள் சாகுபடியினை ஊக்குவித்து காய்கறிகளின் வரத்தினை அதிகரிக்கும் வகையில் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 25 முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தேசிய அளவில் சிறந்த மேலாண்மை நிறுவனங்களில் பயின்றவர்களை தலைமைச் செயல் அலுவலர்களாக நியமித்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வேளாண் வணிக செயல்பாடுகளை மேம்படுத்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • டெல்டா மாவட்டங்களில் வறட்சிக் காலங்களில் பாசன நீர்த்தேவையினைப் பூர்த்தி செய்திடும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களை தூர்வாரி மேம்படுத்தப்படும்.
  • அதிக காய்கனி வரத்துடன் செயல்பட்டு வரும் 20 உழவர் சந்தைகளில் அவற்றின் செயல்பாடுகளை மேலும் அதிகரிக்கும் விதமாக அவற்றின் கட்டமைப்பு வசதிகள் ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா, சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலை மரபணு பூங்கா ஆகியவற்றின் அடிப்படை வசதிகள் ரூ. 1 கோடியே 22 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
  • தேசிய அளவிலான உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் விளை பொருட்களைப் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் குறித்த பயிற்சிகள் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் அளிக்கப்படும்.
  • அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் அலங்கார மலர் செடிகள், அலங்கார தாவரங்களின் நாற்றுகளை உற்பத்தி செய்து வழங்கிட ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் இயங்கிவரும் காய்கறிகளுக்கான மகத்துவ மையத்தின் கட்டமைப்பு வசதிகள் ரூ. 1 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
  • கரும்பில் பயறுவகை பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவிக்க 10 மாவட்டங்களில் 5 ஏக்கர் அளவில் 400 செயல்விளக்கத் திடல்கள் ரூ.72 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
  • ராணிப்பேட்டை மாவட்டம், நவ்லாக் அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தென்னங் கன்றுகளை பாதுகாக்க ரூ. 50 லட்சம் செலவில் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • பயிர்களைத் தாக்கும் பூச்சி, நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து அவைகளை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்திட பூச்சி, நோய் விழிப்புணர்வு வழிகாட்டி (Pest & Disease Calendar) ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில், 1 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
  • ஆழியார்நகரில் உள்ள அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகளைப் பாதுகாக்க ரூ.40 லட்சம் செலவில் முதற்கட்டமாக பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் கட்டமைப்பு வசதிகள் ரூ.25 லட்சம் ரூபாய் மேம்படுத்தப்படும்.
  • டிராகன் பழத்தின் உற்பத்தி, பரப்பினை அதிகரிக்க கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் டிராகன் பழத்திற்கான செயல்விளக்கத் திடல் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
  • பேரிடர் காலங்களில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களை மாற்றி வடிவமைத்திட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ஈரோடு மாவட்டம், தாளவாடி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் உருளைக்கிழங்கு சாகுபடியினை ஊக்குவிக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களுக்கு மானியம் வழங்கிட ரூ. 20 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • உயிர்ம வேளாண்மை மேற்கொள்ள தேவையான சான்று விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் அரசு விதைப் பண்ணைகளில் 20 ஏக்கரில் உயிர்ம வேளாண் முறையில் சிறுதானியங்கள், பயறு வகைகளின் விதைகள் உற்பத்தி செய்திட ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துகள் நிறைந்த உண்ணக்கூடிய வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் போன்ற காளான் வகைகளின் வளர்ப்பானது வேளாண் செயல்பாடாக அறிவிக்கை செய்யப்படும்.
  • உழவர்களுக்கு பயிர் சாகுபடி காலங்களில் வேளாண் ஆலோசனைகளை உரிய நேரத்தில் உடனிருந்து வழங்கி, அவர்களுக்கு உதவிடும் வகையிலும், வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் கிராமப்புர வேளாண்மை சாகுபடி மேலாண்மை அனுபவங்களை நேரில் கற்றிடும் வகையிலும் 5,000 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு செயல்முறை அனுபவம் ஏற்படுத்தப்படும்.
  • உழவர் செயலியில் தனியாருக்குச் சொந்தமான மண்அள்ளும் இயந்திரங்கள், கரும்பு அறுவடை இயந்திரங்கள், டிரோன்கள், விசைத்துளைக் கருவிகள் பற்றிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
  • வேளாண்மைப் பொறியியல் தொடர்பான அரசுத் திட்டங்களின் சிறப்பம்சங்களை விவசாயிகளுக்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டிலுள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.
  • வேளாண் விளைபொருள் ஏற்றுமதிக்கான வழிமுறைகளை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ’ஏற்றுமதி ஆலோசனை மையங்கள்’ (Export Consultancy Cell) அமைக்கப்படும்.
  • வேளாண் கட்டமைப்பு நிதி திட்டத்தில் வங்கிக் கடன் பெற்று தொழில் துவங்க ஆர்வமுள்ள விவசாயிகள், தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு இலவசமாகத் திட்ட அறிக்கை தயாரித்து வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
  • வேளாண் விளைபொருட்களின் தரத்தை விவசாயிகள் அறிந்திடும் வகையில் தரம் பிரிப்பு, பகுப்பாய்வுப் பயிற்சிகள் கிராம அளவில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, சுற்றுச் சூழல், காலநிலை மற்றும் வனத்துறையின் அரசாணை (டி) எண். 185, நாள் 25.09.2023ன்படி அமைக்கப்பட்ட சிறப்புக் குழு அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து, விவசாயிகளின் நலன் கருதி உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கணவனை இழந்த பெண்கள் முதல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வரை: கால்நடை பராமரிப்புத்துறையின் புதிய அறிவிப்புகள்.! - 11 New Updates in Animal Husbandry

ABOUT THE AUTHOR

...view details