சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, மற்றும் இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்தவர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர், கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா இல்லாததால் கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, சாந்தன் நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயைக் கவனிப்பதற்காக, தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, தமிழக அரசு தரப்பில், “ பிப்ரவரி 22 ஆம் தேதி, சாந்தனை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அனுப்ப முடியவில்லை.
அதனைத்தொடர்ந்து, பிப்ரவரி 27ஆம் தேதி மீண்டும் அவரை இலங்கைக்கு அனுப்ப முயற்சி செய்யப்பட்டது. ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்து, இதயப் பாதிப்பு காரணமாகப் பிப்ரவரி 28ஆம் தேதி உயிரிழந்தார். அதனால், அவரை இலங்கைக்கு அனுப்ப முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.