சென்னை : தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தேனி, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, கோயம்புத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் இயக்குவதற்காக 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் (Bike Ambulance) வாங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ.1.60 கோடியில் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக (Feeder Ambulance) செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்து செல்ல வழிவகுக்கும். மாநிலம் முழுவதும் உள்ள எளிதில் அணுக முடியாத மலைக் கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்களின் சுகாதார சேவையை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதையும் படிங்க:அமெரிக்க துணை அதிபராக தேர்நெடுக்கப்பட்டுள்ள ஜே.டி வான்ஸூக்கு வாழ்த்து கூறிய ஆந்திர முதலமைச்சர்!
போக்குவரத்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு குறித்த நேரத்தில் உரிய மருத்துவ சேவை கிடைப்பதை இந்த இரு சக்கர அவசரகால வாகன சேவை உறுதி செய்யும். நவீன முறையில் உரிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர அவசரகால வாகன சேவையானது தற்போதுள்ள 1,353 அவசரகால 108 ஊர்தி சேவையினுள் அடங்கும்.