சென்னை:பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முத்துராமலிங்கத் தேவர் மற்றும் அண்ணா குறித்து பொய்யான செய்திகளை பரப்பிய புகாரில், அவர் மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 1956ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஒரு விழாவில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பகுத்தறிவு கருத்துக்களை பேசிய அறிஞர் அண்ணாவை மிகக் கடுமையாக சாடியிருந்தார்.
இது குறித்து மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பாலபிஷேகத்திற்கு பதில் ரத்த அபிஷேகம் நடைபெறும் என்று எச்சரித்தார். முத்துராமலிங்கத் தேவரின் இந்த எச்சரிக்கைக்கு பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், பா.ஜ.க - அ.தி.மு.க இடையே கூட்டணி பிளவு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த பேச்சைக் கண்டித்து சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ், இரு பிரிவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்துதல், பொய்யான செய்தியை மக்களிடையே கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், அண்ணாமலை பேசியதற்கான பல்வேறு செய்தித்தாள்களை ஆதாரமாக தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஒரு சில வழக்குகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது அவசியமாகிறது. அதன்படி, அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்த நிலையில், அதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவைப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அரசாணை போட வேண்டும்.
இந்நிலையில், தற்போது அந்த அரசாணைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கான அரசாணை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜெயக்குமார் கொலை வழக்கு; காவல்துறையின் விசாரணை திருப்திகரமாக உள்ளது - செல்வப்பெருந்தகை உறுதி - Selvaperunthagai On Jayakumar Death