விழுப்புரம்:இந்தியா கூட்டணி சார்பில் விழுப்புரம், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளர் து.ரவிக்குமார் சிறந்த எழுத்தாளர், அரசியல் விமர்சகர், கவிஞர், பன்முகத்திறமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.
இட ஒதுக்கீடு: நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பழங்குடியின, சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. நாட்டை நிர்வகிக்கும் அரசு செயலாளர்களில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 3 சதவீதம் கூட கிடையாது. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டாமா? நல்ல வேலைக்குப் போக வேணாமா? கடந்த 2,3 தலைமுறையாகத் தான் நாம் படித்து முன்னேறி மரியாதையான வேலைகளுக்கு வந்திருக்கிறோம்.
இதெல்லாம் நாம் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டினாலும், சமூகநீதியினாலும் கிடைத்தது. இன்னமும் நமக்கு இட ஒதுக்கீடு சரியாக கிடைக்கவில்லை. அதுக்கு காரணம் பாஜகதான். ஒவ்வொரு முறையும் இட ஒதுக்கீடு உரிமைக்காகப் போராட வேண்டியுள்ளது.
இட ஒதுக்கீட்டுக்கும் சமூக நீதிக்கும் முற்றிலும் எதிரான கட்சி பாஜக. பாசிச பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறையே இருக்காது. 100 ஆண்டுகள் பின்னோக்கி போய்விடுவோம். இதற்காகத் தான் நாம பாஜகவை எதிர்க்கிறோம். ஏனெனில், இட ஒதுக்கீடு கிடைக்க நாம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து போராடுகிறோம். இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி.
தமிழ் மக்களுக்கு வணக்கம் சொன்னால் போதும், வேட்டி கட்டினால் போதும், இட்லி பிடிக்கும், பொங்கல் பிடிக்கும் என்று சொன்னால் போதும் என நினைத்துக் கொண்டு பிரதமர் மோடி வருகிறார். மக்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்பவர்களைத் தான் மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள். மக்களை மதிக்காதவர்களை மக்கள் மதிக்க மாட்டார்கள்.
பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் எத்தனை தடவை படையெடுத்து வந்தாலும் தமிழ்நாட்டை பாஜக கைப்பற்ற முடியாது. இது பெரியார் மண், அண்ணாவின் மண், கருணாநிதியுடைய மண். இங்கு திமுக இருக்கும் வரை உங்கள் எண்ணம் பலிக்காது.
பாஜக வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு: ஏனெனில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது திமுக ஆட்சியில் தான். மாவட்டந்தோறும் தொழிற்சாலை கொண்டு வளர்ச்சிக்கு வழிவகுத்ததும் திமுக ஆட்சியில் தான். இந்த திராவிட மாடல் ஆட்சி டெல்லியிலும் இந்தியா கூட்டணி மூலமாக எதிரொலிக்கும். ஏனென்றால் பாஜக வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு.
பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால் நாடெங்கும் மதவெறி ஊட்டப்பட்டு எங்குப் பார்த்தாலும் மதக்கலவரம் உருவாகும் நிலை ஏற்படும். மக்களை பிளவுபடுத்துவதும், மாநில உரிமைகளைப் பறிப்பதுமே பாஜகவின் திட்டம். அதனால் பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தி நாற்பதும் நமதே நாடும் நமதே எனத் தெரியப்படுத்துங்கள்.
இந்நிகழ்வில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ,பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன், சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஸ்ரீதர் வாண்டையார், காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், கடலூர் எம்எல்ஏ அய்யப்பன், கள்ளக்குறிச்சி எம்பி கௌதமசிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - Minister Anitha Radhakrishnan Case