சென்னை: தமிழ்நாட்டில் மாதாந்திர மின்கணக்கீடு கண்டிப்பாக நடைபெறும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கோடை காலத்தில் மின்சாரம் தடையில்லாமல் விநியோகம் செய்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 12,265 மின்கம்பங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை மாற்ற பணிகள் குறுகிய காலத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டுகள். கோடை காலத்தில் சீராக மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எங்கெல்லாம் லோ வோல்டேஜ் மற்றும் ஓவர் லோட் ஏற்படும் இடங்கள் என கணக்கெடுக்கப்பட்டு 1129 இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னகத்திற்கு வரும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய மின் இணைப்புகளை கால தாமதம் இல்லாமல் விரைவாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் கடந்த ஆண்டு 20,830 மெகா வாட் மின் தேவை இருந்தது. இந்த ஆண்டு 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மின்சார வாரியம் தயாராக உள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஏலம் விடப்பட்டது. இதில் மின்சார வாரியம் எதிர்பார்த்த அளவுக்கு குறைந்த அளவிலான விலைப்புள்ளிகள் வரவில்லை. இதன் காரணமாக ஏலம் ரத்து செய்யப்பட்டது. புதிய ஏலத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். விரைவில் ஒப்புதல் கிடைத்தவுடன் மின்சார வாரியத்தில் பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சோலார் மின் தயாரிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
மாதாந்திர மின்கணக்கீடு கண்டிப்பாக நடைபெறும். ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறைவடைந்த பின்னர் மாதாந்திர மின்கணக்கீடு அமலுக்கு வரும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.