"ஜாமீன் வழங்கும் போது கடுமையான நிபந்தனைகள் வேண்டாம்" - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்! - BAIL CASE
குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்களுக்கு ஜாமீன் வழங்கும் போது கடுமையான நிபந்தனைகளை விதிக்காமல் இருக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Published : Jan 29, 2025, 4:06 PM IST
சென்னை:குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்களுக்கு ஜாமீன் வழங்கும் போது கடுமையான நிபந்தனைகளை விதிக்காமல் இருக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு வழக்குகளில் கைதாகி விசாரணை நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீன் வழங்கியும், ஜாமீன் பெற்றவர்கள் பிணைத்தொகையை நீதிமன்றத்தில் செலுத்த முடியாமல் சிறையில் இருப்பதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணை எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுவரை எத்தனை கைதிகள் ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறையிலேயே உள்ளனர்? என சிறைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் 104 கைதிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டும் சிறையில் இருப்பதாக தெரிவித்தார். அனைத்து வழக்குகளையும் முடிக்க குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற 27 கைதிகள் நிலை என்ன ஆனது? ஜாமீன் கிடைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் சிறையில் இருந்து வெளியே வர தயங்குகின்றனர்? உண்மையில் பிணைத்தொகை செலுத்த முடியாதது தான் காரணமா? அப்படி பிணைத்தொகை செலுத்த முடியாமல் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை சட்டப்பணிகன் ஆணையம் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.