சென்னை:நடப்பாண்டிற்கானமுதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால் பல முக்கிய நலத்திட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், “சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்சியை ஊக்குவிக்கும் வகையில், முதல் தலைமுறை தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் (NEEDS) வரும் நிதியாண்டில் 101 கோடி ரூபாய் அளவில் மானிய உதவி அளிக்க நிதி ஒதுக்கப்படும். மேலும், சிறு குறு நிறுவனங்களுக்கு சரியான நேரத்தில் அவர்களுக்குரிய தொகை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய மின்னணு வர்த்தக வரவுகள் தள்ளுபடி (TReDS) தளத்தில் பெரும்பான்மை பொதுத்துறை நிறுவனங்கள் இணைவது உறுதி செய்யப்படும்.
மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிகளின் விளைவால் புத்தொழில் நிறுவனங்கள் (Startups) அமைவதற்கான உகந்த சூழலை உருவாக்குவதில் நாட்டிலேயே தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தில், உலகின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில்முனைவோர்களும் கலந்துகொள்ளும் வகையில் உலக புத்தொழில் மாநாடு (Global Startup Summit) சென்னையில் நடத்தப்படும்.
சமூக மேம்பாடு குறித்த தேவைகள், காலநிலை மாற்றம், அரசுத்துறை சார்ந்த சேவைகள் குறித்தான தீர்வுகளை உருவாக்கவும், அவற்றை செயல்படுத்தக் கூடிய ஆர்வமும் ஆற்றலும் மிக்க தொழில்முனைவோர்களைக் கண்டறிந்து அந்நிறுவனங்களுக்குத் தேவையான வளங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்திட பெரியார் சமூகநீதி புத்தொழில் வளர்மையம் உருவாக்கப்படும். சமூகத்தில் விளிம்புநிலையில் வாழும் மக்கள், பட்டியலின மற்றும் பழங்குடியினரால் தொடங்கி நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த மையம் முன்னுரிமை அளிக்கும்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் (TANSIDCO) திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம் வட்டம், சிவகங்கையில் மானாமதுரை வட்டம், திருவாரூரில் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆகிய இடங்களில் 80 ஏக்கர் பரப்பளவில், ரூ.32 கோடி மதிப்பீட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான மூன்று புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன்மூலம் 3 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.