தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலாவதியான கொள்கையை தமிழக மாணவர்கள் மீது திணிப்பதா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி! - ANNAMALAI QUESTION TO M K STALIN

கடந்த 1960களின் காலாவதியான கொள்கையை (இருமொழிக் கொள்கை), தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2025, 5:15 PM IST

சென்னை: புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி தர முடியாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் இந்தப் போக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக முதலமைச்சரை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?

தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?' அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details