தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வகுப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்வதை பெரிதாக்கி தண்டனை கூடாது: சபாநாயகர் அப்பாவு அட்வைஸ்! - TN ASSEMBLY SPEAKER APPAVU

வகுப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்வதை பெரிதாக்கி ஆசிரியர்களை அதிகாரிகள் கண்டிக்கக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு 'அன்பாடும் முன்றில்' நிகழ்ச்சியில் பேசினார்.

சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு
சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 8:46 PM IST

திருநெல்வேலி: பள்ளி மாணவர்களிடையே சுய - ஒழுக்கம், நல்லிணக்கம் உள்ளிட்டவைகளைக் கொண்டு வரும் முயற்சியாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பில் கடந்த பிப்ரவரி மாதம் "அன்பாடும் முன்றில்" என்ற திட்டம் உருவாக்கப்பட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பள்ளியில் மாணவர்களிடையே நடைபெறும் மோதல்களை தவிர்த்து அவர்களிடையே ஒற்றுமை, இலக்கியம், கலாச்சாரம், உளவியல் மேம்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாணவர்களின் திறனை வளர்க்க குழு விளையாட்டு உட்பட பல புதிய நிகழ்ச்சிகளை நடத்த இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு (Credit - ETV Bharat Tamil Nadu)

குறிப்பாக, திருநெல்வேலியில் மாணவர்கள் வேற்றுமைகளை மறந்து ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் பழகுவதற்கு மாவட்ட கல்வி, காவல், வருவாய், உள்ளாட்சி, விளையாட்டு, திறன் மேம்பாடு, மாவட்ட கலை மன்றம் ஆகிய துறை அதிகாரிகளும், குழந்தைகள் நல மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை 'அன்பாடும் முன்றில்' திட்டத்தின் மூலம் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க :"காலிப் பணியிடங்களை நிரப்பாமல் எப்படி தரமான கல்வியை வழங்க முடியும்" - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

இந்த திட்டத்தின் 125வது நிகழ்வாக பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் மாணவர் தலைமைத்துவ மேம்பாட்டு நிகழ்வு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையாளர் அனிதா, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில் பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, "அரசு மாணவர்களை எவ்வாறு நல்வழியில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் பல்வேறு ஆலோசனை வழங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசுப் பள்ளிகளை மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இணையாக கொண்டு வர வேண்டும் என அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர உத்தரவிட்டார். அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகள் மட்டுமில்லாது ஆண் குழ்ந்தைகளுக்கும் மாதம் ரூ.1000 திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களில் நேர்முகத் தேர்வின் போது மாணவர்கள் தங்கள் முழு திறனையும் செலுத்தி வெற்றி பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் தமிழக அரசு அளித்து வருகிறது.

காமராஜர் என்றால் ஞாபகம் வருவது மதிய உணவு திட்டம் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முறை பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது காலை உணவு இல்லாமல் மாணவர்கள் வருவதை அறிந்து காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். காலை உணவுத் திட்டமானது கடல் கடந்து கனடா நாட்டிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை பெரும் வகையில், ஒவ்வொரு வேலை வாய்ப்பு முகாம்க்கு 100 பெரிய நிறுவனங்கள் இடம்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சுத்தம் என்ற நிலையில் இல்லாத பேருந்து நிலையத்தின் பொது கழிவறைகளை தேசத் தந்தை மகாத்மா காந்தி தானே முன்வந்து சுத்தம் செய்து இருக்கிறார். வகுப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்யும் முறையை பெரிதாக்கி ஆசிரியரைக் கண்டிக்கும் நிலையை அதிகாரிகள் மாற்ற வேண்டும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details