சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றும் (டிச.9) நாளையும் (டிச.10) என இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. முதல் நாளாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகள் எழுப்பிய நிலையில் அவற்றுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
"மலட்டாற்றின் கரை பலப்படுத்தப்படுமா?":இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன், “தென்பெண்ணை ஆற்று உபரி நீர் மலட்டாற்றில் திறந்து விடப்பட்டு 13 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மலட்டாற்றின் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் சேதாரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. தென் பெண்ணை ஆற்று வெள்ளத்தால் சேதாரம் ஏற்பட்ட இடங்களில் செப்பனிடும் பணி நடக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி 40 முதல் 50 பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் சேதாரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. மேலும் மலட்டாற்றில் உடனடியாக கரைகளை பலப்படுத்த வேண்டிய தேவை இருந்தால் உடனடியாக பலப்படுத்துவோம்” என்று பதிலளித்தார்.
"உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை":இதன் பின்னர், "சோமரசன்பேட்டையில் உய்யகொண்டான் வாய்க்காலில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும்" என்று ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “உய்யகொண்டான் கால்வாய் 69 கி.மீ தூரம் சொல்கிறது, வேளாண் பாசனத்திற்கான கால்வாய் இது. இதன் மூலம் தஞ்சை திருச்சியில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் 11 மாதங்கள் பாசன வசதி பெறுகிறது.