சென்னை:கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து விவாதிக்க வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரின் உத்தரவின் படி குண்டுக்கட்டாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதம் இரண்டாம் நாளான இன்று தொடங்கியது. அப்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கண்டனம் தெரிவித்து கருப்பு சட்டையுடன் வந்திருந்த அதிமுகவினர் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அதிமுகவினரை அமைதியாக அமரும்படியும் இது தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு பின்னர் வழங்கப்படும் என கூறினார். தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், இதுவரை 50 பேர் பலி என தகவல் வந்துள்ளது. புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மருத்துவமனையிகள் 90 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 110 பாதிப்பு எனவும் புதுச்சேரியில் பலரும் கவலைக்கிடம் எனவும் சேலத்தில் பலருக்கும் பார்வையிழப்பு எனவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து அதிமுக சார்பில் கேள்விகள் எழுப்ப பேரவை தலைவர் விவாதிக்க அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், சட்டமன்றம் கூடியதும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் குறித்து பேச அனுமதி கேட்டோம். ஆனால், சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார். அவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இது குறித்து கேள்வியெழுப்பிய உதயக்குமார் எம்எல்ஏவை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது ஹிட்லர் ஆட்சியைப் போல, சர்வாதிகார ஆட்சி. எதிர்க்கட்சிகளின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கவேண்டும். எங்களது எதிர்க்கட்சி துணைத்தலைவரை கைது செய்யும் போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இது திறமையற்ற அரசாங்கம். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? நீங்கள் ஊடகங்களில் வாயிலாக என்ன நடக்கிறது என்பதை வெளிப்படுத்துங்கள். இந்த மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
இன்னும் எவ்வளவு பேர் சிகிச்சையில் உள்ளனர்? என்ன நிலைமை என்பதையெல்லாம் பேச அனுமதிக்கவில்லை. மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. ஓமிப்பொர்ஸோல் என்ற மருந்து இல்லை. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை.
மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயது முதிர்ச்சி உள்ளிட்டவர்களால் உயிரிழந்தனர் என வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இரண்டு பேர் பேசிய வீடியோக்களை செய்தியாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
உண்மை செய்தியை கலெக்டர் வெளியிட்டு இருந்தால், பலரும் சிகிச்சை பெற்றிருப்பார்கள். இதற்கு பின்பு, பலரும் மது குடித்ததாக அப்பெண் கூறியதாக தெரிவித்த எடப்பாடி கே.பழனிசாமி, அரசின் தூண்டுதலின் பெயரில் தான் கலெக்டர் இதுபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், அரசை கண்டித்து வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சட்டப்பேரவை தொடங்கியது: சபாநாயகரை முற்றுகையிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்! - Illicit Liquor In Kallakurichi