திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகள் அங்கே சேகரித்து வைப்பதன் மூலம் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், அணுக்கழிவு சேகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நெல்லையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் அணைக்கட்டு எம்எல்ஏ A.P.நந்தகுமார் தலையில், குழு உறுப்பினர்கள் அசோகன், ஈஸ்வரன், மு.பெ.கிரி, துரை.சந்திரசேகரன், சிந்தனை செல்வன், பிரகாஷ், வேலு, ஜவாஹிருல்லா ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
சட்டப்பேரவை கமிட்டி தலைவர் நந்தகுமார் பேட்டி (Credits -ETV Bharat Tamil Nadu) முதலாவதாக, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குச் சென்ற அவர்கள், அங்கு அணுமின் நிலைய திட்ட இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி எப்படி நடைபெறுகிறது என செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி, பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, வள்ளியூர் அருகே உள்ள வடலிவிளையில் ஆசியக் கண்டத்திலேயே முதன் முதலாக அமைந்துள்ள 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் காற்றாலையைப் பார்வையிட்டனர். பின்னர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது நிறுவனங்களின் அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: "விஜயின் நிறம் வெளிப்பட்டுவிட்டது" - ஹெச்.ராஜா விமர்சனம்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார், "நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், அணுமின் நிலையம் அமைப்பதற்கு இடம் வழங்கிய 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு பணி வழங்குவதில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இடம் வழங்கிய குடும்பத்தினர் தொழில்நுட்ப ரீதியான பயிற்சி பெறாதவர்கள் என்ற தகவல் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அதனால், நெய்வேலி அனல் மின் நிலையத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவதைப் போல், இங்கும் செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகள் சேகரிப்பு குறித்த தகவல்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது, அணு உலை பகுதியில் அதனை சேகரித்து வைத்து வருவதாகவும், அதனால் எந்த பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாது என்ற தகவலும் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணுக்கழிவுகள் சேகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இன்னும் 2 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அணுமின் நிலையத்தின் அறிக்கையை ஆய்வு செய்த பின், இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். நெல்லை மாவட்டம் வடலிவிளை கிராமத்தில் பிரேசில் நாட்டின் ஒத்துழைப்புடன் குறைந்த காற்று இருந்தாலும் கூட, மின்சாரம் தயாரிக்கும் புதிய நடைமுறை பின்பற்றும் மாதிரி காற்றாலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்