சேலம்: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக சில மாதங்களுக்கு முன்பு அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது. இதனையடுத்து, அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக ரகசியப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல பாரதிய ஜனதா தலைமையும் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிமுகவுடன் நெருக்கமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று(பிப்.26) திடீரென பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசனும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இணைந்து கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் பேசினர்.
முன்னதாக ஜி.கே.வாசன் எம்.பி பதவி பெறுவதற்கு அதிமுகவின் பங்கு அதிகளவில் இருப்பதனால், அவர் அதிமுக கூட்டணியில் தான் சேர்வார் என்று எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிலைகொண்டிருந்த பெரும் நம்பிக்கையை உடைத்துள்ளது ஜி.கே.வாசனின் கூட்டணி முடிவு.
இந்தச் சம்பவம் அதிமுகவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணிச் செயலாளர் யுவராஜா இன்று (பிப்.26) திடீரென சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் காலை 10 மணியளவில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு, கூட்டணி விவகாரங்களில் மாற்றம் போன்ற கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவுடன் கூட்டணி என அறிவித்துள்ள நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணிச் செயலாளரான யுவராஜா எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:'இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' - ஓபிஎஸ் தகவல்