கள்ளக்குறிச்சி:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பினர் சார்பில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று (அக்.2) நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக சார்பில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்று டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது மாநாட்டில் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், "போதைக்கு எதிரான பிரசாரம் என்பது வரவேற்கத்தக்கது. போதை ஒழிப்பு பிரசாரத்துக்கு என்று தனியே ஆட்களைத் தேர்வு செய்து, ஒவ்வொருவரிடமும் சென்று குடிப்பழக்கத்தால் வரும் தீமைகள், குடிப்பதனால் குடும்பத்துக்கு வரும் இழுக்கு, அவர்களின் பிள்ளைகளுக்கு வருகின்ற கேடு இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்வதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கி வருகிறது. இந்த நிதியை மத்திய அரசு அதிகரித்துத் தர வேண்டும்.
அந்த வகையில், போதை ஒழிப்பு தொடர்பான முதல் கடமை மத்திய அரசுக்கு உள்ளது. அதாவது, மாநில அரசுகளுக்கு உரிய நிதியை வழங்க வேண்டும். 2வது கடமை என்பது, அகில இந்திய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த நடைமுறை செய்ய வேண்டும். இதனை செய்தால் தான் மதுப்பழக்கத்தை ஒழிக்க முடியும். அப்படிச் செய்தாலும் கூட மதுப்பழக்கத்தை ஒழிக்க முடியாது. டாஸ்மாக் கடைகளை அனைவரும் மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், எல்லா டாஸ்மாக்கையும் மூடினாலும் கூட அதானி துறைமுகம் எல்லாம் உள்ளது.
இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போவே வேட்பாளரை அறிவித்த கட்சி.. ஆனா திமுகவுடன் கூட்டணி கிடையாதாம்!
சமீபத்தில் நான் ஒரு செய்தியைப் பார்த்தேன். வெளிநாட்டிலிருந்து ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர், சென்னையிலிருந்து ரயிலில் ராஜஸ்தானுக்கு டிக்கெட் போட்டவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் இருந்தது. குஜராத்திலேயே போதைப்பொருளால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை என்பது கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் 96 ஆக இருந்தது. ஆனால், அதனை குஜராத் அரசு ஏற்க மறுத்துவிட்டது. பீகாரில் 140 பேர் இறந்துள்ளனர். இந்த கெடுதல் நாடு முழுவதும் பரவி உள்ளது.
இதனால் இந்த விவகாரத்தை அகில இந்திய பிரச்னையாக எடுத்து மத்திய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் தான் பலன் கிடைக்கும். தமிழ்நாட்டில் இன்றைக்கு மதுவிலக்கு அமல்படுத்தினால் 1970க்கு முன்பு இருந்தது போல் பாண்டிச்சேரிக்கு செல்வார்கள். ஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்லும் நிலை இருக்கும். அப்படியான சூழல் இருக்கக் கூடாது.
நாடு முழுவதும் இந்த போதைப்பொருள் விளைவிக்கும் தீமைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும். சாதாரணமாக நம் ஊர்களில் ஒன்றைச் சொல்வார்கள். 'குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு'. இதனை மாற்ற அகில இந்திய அளவில் மது விலக்கு என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்