சென்னை: திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம் முன்பு, 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத் துறை அனுமதியளித்து, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், புராதன கட்டிடமான ராஜகோபுரத்தின் முன் வணிக வளாகம் கட்டுவது, கோயிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும் எனவும் விழா காலங்களில் பக்தர்கள் பங்கேற்க தடையாக இருக்கும் எனவும் கோயில்களில் கட்டுமானங்கள் மேற்கொள்வது தொடர்பாக, மாநில அளவிலான குழுவின் ஒப்புதல் பெறப்படவில்லை எனவும் வணிக வளாகம் கட்ட கோயில் நிதி பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கிய அரசாணைக்குத் தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டுமெனவும், கோயில் நிதியை மீண்டும் கோவில் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.