திருநெல்வேலி:பாபநாசம் அருகே காரையாறு வனப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே, பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22ஆம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை விழா வெகுவிமரிசையாக நேற்று நடைபெற்றது. அதன்படி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள், அதிகாலை முதலே அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றில் நீராடி, பொங்கலிட்டும், சங்கிலியால் அடித்தும் வழிபடத் தொடங்கினர். இரவில் கோயில் வளாகத்தில் மூன்று இடங்களில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
முன்னொரு காலத்தில் பாபநாசம் வனப்பகுதி உள்பட அனைத்தும் சிங்கம்பட்டி ஜமீன் குடும்ப கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. எனவே தான் கடைசி ஜமீனான முருகேச தீர்த்தபதிக்கே மரியாதை அளித்து வந்தனர். வழக்கமாக ஆடி அமாவாசை விழா அன்று இரவில் சிங்கம்பட்டி ஜமீன் முருகேச தீர்த்தபதி ராஜ அலங்காரத்தில் தர்பாரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஆனால் சில ஆண்டுக்கு முன் அவர் மறைந்துவிட்டதால் அவரது புகைப்படம் ராஜ அலங்காரத்துடன் தர்பாரில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.