திருநெல்வேலி:சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மருத்துவமனையாகத் திகழ்ந்து வருகிறது நெல்லை அரசு மருத்துவமனை. இங்கு நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதிலும் குறிப்பாக இதயவியல் துறை, சிறுநீரகவியல் துறை, நரம்பியல் துறை என அனைத்து துறைகளும் 1500க்கு மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இம்மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டு முக்கிய சிகிச்சைகள் குறித்து கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது, "தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் மகன் ஸ்டாலின் கிரேஸ் டேனிசன் என்ற 11 வயது சிறுவன், கடந்த மாதம் 26ஆம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது , எதிர்பாராத விதமாக அவரது மார்பின் இடது புறத்தில் ஆறு அங்குலம் நீளமான கத்தரிக்கோல் குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அப்போது, பணியிலிருந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததோடு மட்டுமல்லாமல் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.