சென்னை: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் 1500 ஏக்கர் பரப்பில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகே விண்வெளி தொழிற்சாலை மற்றும் உந்து சக்தி பூங்காவை அமைப்பதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட்(TIDCO) அதிகாரப்பூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது.
குலசேகரப்பட்டினத்தில் ரூ.950 கோடி செலவில் 2,233 ஏக்கரி்ல், இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (TIDCO) விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU with ISRO's INSPACE) கையெழுத்திட்டுள்ளது.
விண்வெளி துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு என்ற சமீபத்திய அறிவிப்பு உலக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டின் விண்வெளி துறையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் என டிட்கோ தெரிவித்துள்ளது. விண்வெளி பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஆய்வு மையம் திறக்கப்பட்ட உடன் தமிழ்நாட்டை விண்வெளி விரிகுடாவாக மாற்றுவதற்கு 'விண்வெளி பூங்கா திட்டம்' உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி தொழிற்சாலை என்றால் என்ன?:இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், இந்தியாவின் மூன் மேன் (Moon Man of India) என்று அழைக்கப்படுபவருமான மயில்சாமி அண்ணாதுரை ஈடிவி பாரத்திடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்களின் படி,தற்போதைய நிலையில் இந்தியாவின் ஒரே ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிக்கோட்டாவில் ஏவுதளம் மட்டுமே உள்ளது. மற்றபடி ராக்கெட் எரிபொருள் உற்பத்தி, உதிரிபாகங்கள் உற்பத்தி என அனைத்துமே கர்நாடகா, திருவனந்தபுரம் , மகேந்திரகிரி உள்ளிட்ட இடங்களில் நடக்கின்றன.
இவை அனைத்தையும் சாலை மற்றும் ரயில் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டா கொண்டு வந்த பின்னர் ஒன்றிணைத்து ராக்கெட் அனுப்பப்படுகிறது. மாறாக குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி தொழிற்சாலையே அமைய உள்ளது. தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் ராக்கெட்டுகளை வணிக நோக்கில் ஏவும் இந்த தளத்தில், அனைத்தும் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு விண்வெளியில் ஏவப்படும் என்பதால், ஓராண்டில் ஏவப்படும் ராக்கெட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என குறிப்பிட்டிருந்தார். இஸ்ரோ மட்டுமின்றி தனியார் பங்களிப்பும் இருப்பதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கருணாநிதியின் கனவு.. கனிமொழி எம்பி நெகிழ்ச்சி பதிவு!