விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அறுங்குறிக்கை கிராமத்தில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை திருக்கோவிலூர் அருகே உள்ள பெருங்குருக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம்(48), நரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(40) மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெய்வணை கிராமத்தைச் சேர்ந்த முருகன்(38) ஆகியோர் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மீண்டும் கிணறு ஆழப்படுத்தும் பணியை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது பொக்லைன் இயந்திரத்தில் ரோப் கயிற்றால் பெரிய இரும்புத் தொட்டியை கட்டி கிணற்றுக்குள் மூவரும் இறங்கியுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக ரோப் அறுந்து 100 அடி ஆழமுள்ள அக்கிணற்றுக்குள் மூவரும் விழுந்துள்ளனர். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே கை, கால் உள்ளிட்ட பகுதிகள் முறிந்து உயிரிழந்துள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மூவரது உடலைக் கிணற்றிலிருந்து மேலே தூக்கி, உயிரிழப்பிற்குக் காரணமான பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுநர், நிலத்தின் உரிமையாளர் மற்றும் இவர்களை இந்த பணிக்கு அழைத்து வந்த நபர் என மூன்று பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி கதறி அழுதுள்ளனர்.