தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மரண பயத்தை உணர்ந்தோம்" - துவக்கி வைத்த 2ம் நாளே பழுதான அய்யர்மலை ரோப்கார்.. அந்தரத்தில் சிக்கித் தவித்த 3 பெண்கள்! - Ayyarmalai Rope Car repair - AYYARMALAI ROPE CAR REPAIR

Ayyarmalai Rope Car Repair issue: அய்யர்மலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சரால் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்ட ரோப்கார் நேற்று பாதி வழியிலேயே பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தரத்தில் சிக்கித்தவித்த திருச்சியைச் சேர்ந்த 3 பெண்கள் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அய்யர்மலை ரோப்கார் பழுது தொடர்பான புகைப்படம்
அய்யர்மலை ரோப்கார் பழுது தொடர்பான புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 10:21 AM IST

கரூர்:குளித்தலை அருகே சுமார் 1,176 அடி உயரத்தில் அமைந்துள்ள அய்யர்மலை ரத்தனகிரீஸ்வரர் கோயில் கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு கரூர் மட்டுமின்றி திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

இந்த நிலையில், மூத்த குடிமக்கள் மலை உச்சிக்குச் செல்ல ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் ரோப்கார் (கம்பி வட ஊர்தி சேவை) வசதியானது, பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு ஜூலை 24ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டது.

ரோப்கார் பழுதான போது அந்தரத்தில் சிக்கித்தவித்த பெண் பேசிய வீடியோ (Credit - ETV Bharat Tamil Nadu)

அதுமட்டுமின்றி, பழனி முருகன் கோயிலில் உள்ளதுபோல, பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய, ரூ.2.40 கோடி செலவில் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டண வசூல் மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிட்டத்தட்ட ரூ.9 கோடி மதிப்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மணி நேரத்தில் 192 பேர் பயணம் செய்திடும் வகையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காகக் கம்பி வட ஊர்தி வசதியும் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது, கடந்த 2 நாட்களாக மலைக்கோயிலில் உள்ள ரத்தனகிரிஸ்வரர் சாமியே தரிசிக்க முதல் முறையாக கம்பி வட ஊர்தி மூலம் பக்தர்கள் பலரும் மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று (வியாழன்கிழமை) கோயில் மலை உச்சிக்குச் சென்ற ரோப்கார் பெட்டிகளின் மேல் இணைக்கப்பட்ட கயிறு, பலத்த காற்றின் காரணமாக நழுவியதால் பாதி வழியிலேயே நின்றதாகக் கூறப்படுகிறது.

அதில், திருச்சியில் இருந்து கோயிலுக்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் பக்தர்கள், மலை உச்சியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது பெட்டியில் அமர்ந்தவாறு நடுவழியில் சிக்கித் தவித்தனர். அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து ரோப்கார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த மேலாளர் உட்பட 8 ஊழியர்கள் சுமார் 2.30 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் பழுது குறித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்த பெண்கள் மூவரும் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, ரோப்காரில் சிக்கித் தவித்த பெண்கள் கூறுகையில், "இறங்குவதற்கு சிறிது தொலைவு உள்ள நிலையில், ரோப்கார் பழுது காரணமாக பாதியிலேயே நின்றுவிட்டது. பல மணி நேரமாக சிக்கித் தவித்தோம். மயக்கம் வந்துவிட்டது. அப்போது யாராலும் தண்ணீர் கூட கொடுத்து உதவக் கூடிய சூழல் இல்லை. தாங்கள் மரண பயத்தை உணர்ந்தோம். சாமி எங்களைக் காப்பாற்றிவிட்டது" எனத் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: மதுரவாயல் பறக்கும் பாலம் தடுப்பு சுவரால் விபரீதம்: கணவன், மனைவி உடல் நசுங்கி பலி!

ABOUT THE AUTHOR

...view details