தருமபுரி:தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த பூமிநத்தம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் கம்பைநல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் செண்பகம், திருமலர், திருமஞ்சு உள்பட நான்கு தொழிலாளர்கள் இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிற்பகல் நேரத்தில் குடோனில் இருந்த வெடிபொருட்கள் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில், குடோனில் வேலை செய்து கொண்டிருந்த செண்பகம், திருமலர், திருமஞ்சு ஆகிய மூன்று பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மீதமுள்ள ஒருவர் மதிய உணவிற்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு குடோனில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "கம்பைநல்லூர் அடுத்த பூமிநத்தம் பகுதியில் சின்னதுரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் அரசு அனுமதி பெற்றுதான் நீண்டநாட்களாக செயல்பட்டு வருகிறது. இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் மூன்று பெண் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் விவரம் தமிழக அரசிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் சார்பில் மூன்று குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். பிள்ளைகளின் படிப்புக்கு அரசும் மாவட்ட நிர்வாகமும் போதிய வசதிகளை செய்து தரும்.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை எந்த பட்டாசு குடோன்களும் உரிமம் இல்லாமல் செயல்படவில்லை. இருந்தாலும் தற்போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதால், அனைத்து பட்டாசு குடோன்களிலும் வருவாய் கோட்டாட்சியர்கள் மூலமாக முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சரியாக நடக்கின்றனவா என்று ஆய்வு செய்யப்படும். விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அந்த பட்டாசு குடோன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று மாவட்ட ஆட்சியர் சதீஷ் எச்சரித்துள்ளார்.