திருச்சி:திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, மணப்பாறை ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். விஜயலட்சுமி, அவரது கணவர் கோபி மற்றும் கணவரின் தம்பி கண்ணன் ஆகிய மூவரும், சிவகாசியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றுள்ளனர்.
அப்போது, கார் துவரங்குறிச்சி அருகே உள்ள திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள யாகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜயலட்சுமி, கண்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், கணவர் கோபி படுகாயமடைந்துள்ளார்.
தொடர்ந்து விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவரங்குறிச்சி தீயணைப்புக் குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருவர் இறந்த நிலையிலும், மற்றொருவர் பலத்த காயத்துடனும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கணவர் கோபியும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தஞ்சையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்! - Thanjavur Bus Accident