திருப்பூர்: ஊத்துக்குளி ரோடு அணைக்காடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 3 தளங்களைக் கொண்ட ஒரு குடியிருப்பின் முதலாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உள்பக்கமாக பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் வராண்டாவில் ஒரு பெண்ணும், படுக்கை அறையில் அவரது கணவர் மற்றும் மகள் என மூன்று பேரும் உடல் உப்பிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல (Credits - ETV Bharat) இதனையடுத்து மூவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் நாக சுரேஷ் (35), அவரது மனைவி விஜி (29) என்பதும், இவர்கள் அணைக்காடு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் அணைக்காடு பகுதியில் உள்ள வீட்டிற்கு குடிவந்துள்ளனர். இந்நிலையில், குடும்பத்துடன் கடந்த 4 நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடன் பிரச்னையா அல்லது குடும்பப் பிரச்னையா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வேலூர் சிஎம்சியில் சிகிச்சையில் இருந்த மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்!