சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை நேரடியாக கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், கொலைக்கு உடந்தையாகவும், மூளையாகவும் செயல்பட்டவர்கள் என இதுவரை 24 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
மேலும், இந்தக் கொலை வழக்குக்கு மூளையாகச் செயல்பட்ட பிரபல ரவுடி சம்போ செந்தில் வெளிநாடு தப்பிச் சென்று உள்ள நிலையில், சென்னை போலீசார் மத்திய அரசு உதவியை நாடி, இண்டர் போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி அவரை கைது செய்து சென்னை அழைத்து வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்படி, ராஜேஷ், கோபி மற்றும் குமரன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ராஜேஷ் என்பவர் ரவுடியாக இருந்து வருவதும், புதூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்புவின் கூட்டாளி என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் மூன்று பேரும் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நாட்டு வெடிகுண்டுகள் வாங்கிக் கொடுத்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதில் கோபி, குமரன் ஆகிய இருவரும் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து ராஜேஷிடம் கொடுத்ததாகவும், பிறகு ராஜேஷ் மூலம் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன் என்பவரிடம் கொடுக்கப்பட்டு கொலையாளிகளுக்கு கொடுத்தது தெரியவந்துள்ளது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐந்து நாட்டு வெடிகுண்டுகளை செம்பியம் தணிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் ரவுடி ராஜேஷ் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கோபி, குமரன் மீது ஏற்கனவே நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பான வழக்கு இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்று பேரையும் தனி இடத்தில் வைத்து விசாரித்து வருக்கின்றனர். மேலும், இன்று மாலைக்குள் அவர்கள் மூன்று பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:"போலீஸ் விசாரித்தது உண்மைதான்! ஆனால்" - நெல்சன் மனைவி அளித்த விளக்கம்