தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள மணிக்கட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப் பையன் மகன் சிவன் (35). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி நந்தினி (28). இவர்களுக்கு ஆறு மற்றும் நான்கு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் அவர்கள் வீடு பூட்டப்பட்டிருந்துள்ளது. மேலும், பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து சந்தேகத்தில் ஜன்னல் வழியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். அப்போது, சிவனின் மனைவி, குழந்தைகள் ஆகிய மூவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் மற்றும் தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பூட்டிய வீட்டை உடைத்து பார்த்தபோது, சிவன் மட்டும் மயக்க நிலையில் இருந்துள்ளார். மனைவியும், இரு குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர்.