தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை மையங்களில் குலுக்கல் முறையில் பணி: சென்னை தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்! - Lok Sabha Election 2024

Preparations for Election Counting Work: சென்னையில் மே 29 ஆம் தேதி முதல் வாக்கு எண்ணும் மையங்களில் பணி செய்யக்கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்
சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 4:22 PM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சென்னையில் உள்ள வாக்கு என்னும் மையங்களில் மேற்பார்வையாளர், உதவியாளர் உள்ளிட்டவர்களை முதற்கட்ட கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியானது இன்று (மே 27) சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கும் சேர்த்து நுண் பார்வையாளர்கள் 357 பேர், மேற்பார்வையாளர்கள் 374 பேர், உதவியாளர்கள் 380 பேர், அலுவலக உதவியாளர் 322 பேர் என மொத்தம் 1433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், மூன்று வாக்கு எண்ணும் மையங்களையும் சேர்த்து, மே 29ஆம் தேதி புதன்கிழமை வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இரண்டாவது முறை ஜூன் 3ஆம் தேதி 8 மணி அளவில் எந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு செல்கிறார்கள் என்றும், ஜூன் 4ஆம் தேதி காலை 5 மணிக்கு எந்த மேஜைக்கு செல்வார்கள் என்றும் தேர்வு செய்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன, ஒரு மேஜைக்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் பணி இன்று ஆய்வு செய்யப்பட்டது.

1384 பேர் பாதுகாப்புப் பணியில் தற்போது மூன்று சுற்றுகளில் பணியாற்றுகிறார்கள். இதுமட்டும் இல்லாமல், வாக்கு எண்ணும் நாளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படும் செய்யப்படும், தற்போது குயின் மேரிஸ் கல்லூரியில் 176 கேமராக்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் 210 கேமராக்கள், லயோலா கல்லூரியில் 198 கேமராக்கள் என மொத்தம் 584 கேமராக்கள் உள்ளன.

மேலும், 106 கேமராக்கள் சென்னை வடக்கிலும், 132 கேமராக்கள் சென்னை தெற்கிலும், 107 கேமராக்கள் மத்திய சென்னையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதலாக பொருத்தப்படும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேபோல் தபால் வாக்குகளை எண்ணுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நுண்பார்வையாளர் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் வங்கி ஊழியர்களாகவும், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கல்வித் துறையில் பணியாற்றுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கான பயிற்சி அடுத்த இரு நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து அளிக்கப்படும்.

கூடுதலாக வாக்கு எண்ணும் மையங்களில் 3 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள், அவர்கள் பற்றிய தகவல் ஜூன் 1 ஆம் தேதி அளவில் அளிக்கப்படும். கடந்த வாரம் பூத் ஏஜென்டுகளுடன் அந்தந்த தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூட்டம் நடத்தினர்.

அவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். ஜூன் 1 ஆம் தேதிக்குள் அந்தந்த அரசியல் கட்சிகள் சார்ந்த பூத் ஏஜென்ட்கள் யார் எந்த பூத்களுக்கு வர உள்ளார்கள் என்று அந்தந்த அரசியல் கட்சிகள் தெரிவித்தால், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details