தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு 442வது திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கி, 10 நாட்கள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிகர நிகழ்ச்சி, மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில், காலை 7.30 மணிக்கு திருப்பலி துவங்கியது. அதனைத் தொடர்ந்து இரவு வரை இந்த பனிமய மாதா திருவிழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளியூர் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கானவர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர்.