தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டுமனை பட்டா இருந்தும் நடு ரோட்டில் நிற்கும் நரிக்குறவ மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்! - Thoothukudi collector

Narikuravar Community: தூத்துக்குடியில் வசித்துவரும் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த 52 பேருக்கு வீட்டுமனை பட்டா பேரூரணி பகுதியில் வழங்கப்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் வீடுகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சாலை ஓரத்தில் வசித்து வரும் நரிக்குறவ மக்கள்
சாலை ஓரத்தில் வசித்து வரும் நரிக்குறவ மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 11:05 AM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே நரிக்குறவர்கள் சமுதாயத்தினர் சுமார் 52 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் கடந்த 20 ஆண்டு காலமாகத் தற்காலிக கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். முதலில் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து அவ்வப்போது மாற்றப்பட்ட இச்சமுதாயத்தினர் தற்போது புதிய பேருந்து நிலையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடு அமைத்துத்தர வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ரவிகுமார் வசவப்புரம் கிராமத்திற்குட்பட்ட அனவரதநல்லூர் அருகே உள்ள பரம்புவில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 18 குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

இதனையடுத்து நரிக்குறவர்களுக்கு விரைவில் பசுமை வீடுகள் அல்லது இந்திராகாந்தி நினைவு திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் வழங்கப்படுமெனத் தெரிவித்து இருந்தார். மேலும் நரிக்குறவர்கள் அப்பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து இருந்தால் மட்டுமே இருப்பிடச்சான்று உள்ளிட்டவை வழங்கமுடியும் எனத்தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நரிக்குறவர்கள் அப்பகுதிக்கு சென்று தற்காலிக கூடாரம் அமைக்க முற்பட்டபோது, முற்றிலும் பரம்பு பகுதியாக இருந்ததால் கூடாரம் அமைக்க இயலவில்லை. இதனையடுத்து தங்களுக்கு பரம்பு பகுதியை சீரமைத்து தரவும் குடியிருப்புகளை அமைத்துத்தர வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இருப்பினும் பரம்பு பகுதியில் தங்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையை அடுத்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் அருகே தங்களது கூடாரங்களை அமைத்து வாழ்வாதாரத்தை துவங்கினர். மழையோ, பனியோ, புயலோ, வெயிலோ தங்களது குழந்தைகளுடன் புதிய பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி, மணிமாலை உள்ளிட்டவைகளை விற்று வாழ்வாதாரம் மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் உறுதி:இதனை தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேசன் கார்டு உள்ளிட்டவைகளை உடனே வழங்க உத்தரவிட்டார்.

மேலும் தூத்துக்குடி அருகில் விரைவில் நிலம் வழங்கி பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், வாழ்வாதாரத்திற்கு தேவையான ஆடு, மாடு வழங்கப்படும் என உறுதி அளித்து இருந்தார்.

பின்னர், இவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை, ரேசன் கார்டுகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி பகுதியில் நரிக்குறவர்கள் 52 பேருக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டு அதற்கான பட்டா தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கி இருந்தார்.

வீடு கட்டித்தர கோரிக்கை:இந்தநிலையில் தற்போது நரிக்குறவர்கள் வசித்து வந்த பகுதியில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்காக தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் புதிதாக விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் குடியிருப்பை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் தற்போது திகைத்து நிற்கின்றனர் நரிக்குறவ சமூதயாத்தை சேர்ந்த மக்கள். இது தொடர்பாக அச்சமுதாயத்தை சேர்ந்த மாவீரன் கூறும்போது, "விரிவாக்கம் முடிந்தவுடன் இதில் குடியேறலாம் என சொல்கின்றனர். ஆனால் அது நடக்காது எங்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்த இடத்தை கொஞ்சம் சரி செய்து பசுமை வீடும், வாழ்க்கையை நடத்த ஆடு மாடும் கொடுத்தால் நல்லாருக்கும்" என்கிறார்.

திமோ என்பவர் கூறும் போது, "எங்களுக்கு அரசு சார்பில் பேரூரணி பகுதியில் பட்டா வழங்கப்பட்டது. அந்தப் பகுதியில் வீடுகள் கட்டித் தர மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் எங்களது கூடாரங்களை அப்புறப்படுத்தியுள்ளதால் தற்போது குழந்தைகளுடன் சாலையில் வசிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

நரிக்குறவா் குடும்பங்களுக்கு வழங்கிய பட்டா இடத்தில் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை தற்காலிகமாக தங்குவதற்கு இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என நரிக்குறவா்கள் ஒட்டுமொத்தமாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:"ஒவ்வொரு பணியாளரும் உறுதியான சிப்பாயாக செயல்பட வேண்டும்" - ராமோஜி ராவ் அவரின் ஊழியர்களுக்கான ‘பொறுப்பு உயில்’!

ABOUT THE AUTHOR

...view details