தூத்துக்குடி: தூத்துக்குடி தனியார் இரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு போலி இமெயில் அனுப்பி ரூபாய் 20 லட்சம் பணம் மோசடி செய்ததாக உத்திரபிரதேசத்தை சேர்ந்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீசார், "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் இரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு ஒடிசாவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் இருந்து மூலப்பொருட்கள் வருவது வழக்கம். மூலப்பொருட்கள் வந்த பிறகு வங்கி கணக்கில் பணம் செலுத்துவம் வழக்கமாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் எப்படியோ கண்காணித்து வந்த கும்பல் ஒடிசா மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திலிருந்து மூலப்பொருட்கள் வருவதுபோல் போலியான மெயிலை தூத்துக்குடி இரசாயன உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் நிதித்துறை பொது மேலாளருக்கு மோசடி நபர்கள் அனுபபியதாக தெரிகிறது.
மூலப்பொருட்களை அனுப்பி விட்டதாகவும் அதற்காக ரூபாய் 20 லட்சம் பணத்தை வங்கிக் கணக்கில் அனுப்புமாறும் கூறியுள்ளனர். அதாவது வழக்கமாக பணம் அனுப்பும் வங்கிக் கணக்குக்கு அனுப்பாமல் புதிய வங்கிக் கணக்கை கொடுத்து பணத்தை அனுப்ப கோரியிருக்கின்றனர். இதனை நம்பி இரசாயன உற்பத்தி நிறுவனத்தின் பொது மேலாளர் இமெயிலில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கிற்கு ரூபாய் 20 லட்சம் பணத்தை கடந்த (அக்.7) 07.10.2024 அன்று அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பிய பின்னும் மூலப்பொருட்கள் வராததையடுத்து ஒடிசா டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு இரசாயன நிறுவனத்தின் மேலாளர் கேட்டபோது, நீங்கள் பணம் அனுப்பவில்லை, அதனால் நாங்கள் மூலப்பொருள் அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர். அப்போதுதான் இரசாயன நிறுவனத்தின் மேலாளருக்கு தாம் ஏமாற்றப்பட்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து அவர், என்.சி.ஆர்.பியில் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்,"என்றனர்.